எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 மே, 2015

குழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES



1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப்
2.ஸ்வீட் கார்ன் சாட்
3.பனீர் பீஸ் புலாவ்
4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்.
5.தோசா பிஸ்ஸா
6.மினி இட்லி மஞ்சூரியன்
7.காலிஃப்ளவர் சாப்ஸ்
8 .கசாட்டா ஐஸ்க்ரீம்

1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப்:-

தேவையானவை :-


வெங்காயத்தாள் – 1 கட்டு, உருளைக்கிழங்கு சின்னம் – 1, பூண்டு – 2 பல், ஆரிகானோ – கால் டீஸ்பூன், சோயா சாஸ் – கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், தண்ணீர் – 4 கப், கொத்துமல்லித்தழை – சிறிது. க்ரீம் – சிறிது விரும்பினால்.

செய்முறை:-

வெங்காயத்தாளைச் சுத்தம் செய்து அலசி பொடிப் பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கையும் தோல்சீவிப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயத்தாள், உருளையைப்போட்டு வதக்கி 4 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதைத் திரும்ப பானில் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் சோயா சாஸ், உப்பு, ஓரிகானோ, கொத்துமல்லித்தழை, உப்பு போட்டு இறக்கி மிளகுத்தூள் , க்ரீம் சேர்த்து சூப் ஸ்டிக்குகளுடன் & வெண்ணெயில் வறுத்த ரொட்டித் துண்டுகளுடன் பரிமாறவும்.

2.ஸ்வீட் கார்ன் சாட்:-

தேவையானவை :-

ஸ்வீட்கார்ன் முழுதாக – 1 அல்லது நாட்டு சோளக்கருது – 1, பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளகாய் – மூன்றும் கலந்து சதுரமாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன். சின்ன வெங்காயம் – 2 பொடியாக நறுக்கவும். தக்காளி சின்னம் – 1 பொடியாக நறுக்கவும்.  மல்லித்தழை – சிறிது. சாட் மசாலா – கால் டீஸ்பூன், ராக் சால்ட் – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன். மிளகாய்ப்பொடி – 1 சிட்டிகை. ஆலிவ் ஆயில் – கால் டீஸ்பூன்.

செய்முறை:-

ஸ்வீட் கார்ன் அல்லது நாட்டு சோளக்கருதை நன்கு வேக வைக்கவும். நாட்டு சோளக்கருது என்றால் இளசாகத் தேர்ந்தெடுத்து வேகவைக்கவும். வெந்ததும் மணி மணியாக உதிர்த்து ஒரு பௌலில் போடவும். குடமிளகாய்களை கால் டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் வதக்கி சேர்க்கவும். சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி பச்சையாக சேர்க்கவும். மிளகாய்ப்பொடியையும் ராக் சால்டையும் தூவி எலுமிச்சை சாறு சேர்த்து  மேலாக சாட் மசாலா, கொத்துமல்லித்தழை தூவி சின்ன கப்புகளில் ஸ்பூன் போட்டுக் கொடுக்கவும்.

3. பனீர் பீஸ் புலாவ் :-

தேவையானவை :-

பாஸ்மதி அரிசி – 1 கப், தேங்காய்ப் பால் – 2 கப்,பனீர் – அரை பாக்கெட் ( அல்லது அரை லிட்டர் பாலில் பனீர் செய்து துண்டுகள் செய்து கொள்ளவும். ), பச்சைப் பட்டாணி – 100 கி, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பட்டை, கிராம்பு ஏலக்காய் கல்பாசிப்பு – தலா 2, எண்ணெய் - 2 டீஸ்பூன். ( 10 மிலி ) , உப்பு – முக்கால் டீஸ்பூன், சீனி – 1 சிட்டிகை , கொத்துமல்லித் தழை – 2 டீஸ்பூன்


செய்முறை:-

ஒரு குக்கரில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசிப்பூவைப் போடவும். பொறிந்ததும் பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தைப் போடவும். அது நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி பாஸ்மதி அரிசியைக் களைந்து சேர்த்து 2 கப் தேங்காய்ப் பால் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.

ஆவி போனதும் இறக்கி உதிர்த்து ஆறவிடவும். மீதி ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சதுரத் துண்டுகளாக்கிய பனீர், பச்சைப் பட்டாணியை சிம்மில் வைத்து வதக்கவும். ஒரு சிட்டிகை சீனி, முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்த பாஸ்மதி சாதத்தைக் கொட்டிக் கிளறவும். கொத்துமல்லி தூவி வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

4. ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்.

தேவையானவை :-
தர்பூசணி – 1 துண்டு, பைனாப்பிள் – 1 துண்டு, ஆப்பிள் – பாதி, மஞ்சள் கிர்ணிப்பழம் – 1 துண்டு, பப்பாளி – 1 துண்டு, சப்போட்டா – 1 , ஸ்ட்ராபெர்ரி – 6 , செர்ரி – 6 , டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன், பால் – 2 கப், எம் டி ஆர் பாதாம் மிக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன், கல்கண்டு – 1 டேபிள் ஸ்பூன், குல்கந்து – 1 டேபிள் ஸ்பூன், குல்கந்து இல்லாவிட்டால் ரோஜாப்பூ – 1 + தேன் 1 டேபிள் ஸ்பூன், செம்பருத்தி – 1 பூ, குங்குமப்பூ – 1 சிட்டிகை.

செய்முறை:-

தர்பூசணி, பைனாப்பிள், ஆப்பிள், மஞ்சள் கிர்ணி, பப்பாளி, சப்போட்டா, ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டி ஒரு பேசினில் போடவும். பாலில் குங்குமப்பூவையும் கல்கண்டையும் போட்டு சுண்டக் காய்ச்சவும். ஒரு டம்ளர் அளவு சுண்டியவுடன் இறக்கி வைத்து எம்டிஆர் பாதம் மிக்ஸ் கலந்து ஆறவிடவும்.

ஆறு அகல கப்புகளில் பழக் கலவையை வைக்கவும். ஒரு கரண்டி பாதாம் கலவையை ஊற்றவும். அதன் மேல் நான்காக வெட்டிய ஸ்ட்ராபெர்ரி வைத்து நடுவில் செர்ரியை வைத்து சுற்றிலும் டூட்டி ஃப்ரூட்டியால் அலங்கரிக்கவும். குல்கந்து என்றால் அப்படியே சேர்க்கவும். ரோஜாப்பூ என்றால் இதழ்களை உதிர்த்து எல்லாவற்றிலும் தூவி இத்துடன் பொடியாக அரிந்த செம்பருத்தி இதழ்களையும் தூவி ஒரு டீஸ்பூன் தேன் ஊற்றி பரிமாறவும்.

5. தோசா பிஸ்ஸா:-

தேவையானவை :-

தோசை மாவு – 6 கரண்டி. பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். தக்காளி – 1 பொடியாக அரியவும். பச்சை , மஞ்சள், சிவப்பு குடைமிளகாய் – குச்சியாக நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன், மசாலா சேர்த்து சமைத்த காய்கறிக்கலவை (அல்லது மீல் மேக்கர் அல்லது காளான்) – 1 கப், கொத்துமல்லி – சிறிது, கொரகொரப்பாக அரைத்த மிளகாய்ப் பொடி – கால் டீஸ்பூன், செஷ்வான் சாஸ் – 2 டேபிள் ஸ்பூன், துருவிய சீஸ் – 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

தோசைக்கல்லை முதலில் எண்ணெய் தடவி சூடாக்கி பின் சிம்மில் வைத்து மாவு ஒரு கரண்டி ஊற்றவும். அதிகம் தடவாமல் லேசாகப் பரத்தவும். அதில் வெங்காயம் தக்காளி தூவி, அதன் மேல் சில குடைமிளகாய்த் துண்டுகளை அடுக்கவும். மசாலா சேர்த்து சமைத்த காய்கறிக் கலவை அல்லது காளான் அல்லது மீல் மேக்கர் ஒரு டீஸ்பூன் எடுத்து அங்கங்கே தூவவும். சிறிது மிளகாய்ப் பொடி தூவி செஷ்வான் சாஸை தெளித்து சீஸையும் தூவவும். சுற்றிலும் மேலேயும் உருக்கிய வெண்ணெய் விட்டு தோசை மூடியைப் போட்டுமூடி சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வேக விடவும். வெண்ணெயும் சீஸும் உருகி கீழ்ப்புறம் பொன்னிறமாக ரோஸ்ட் ஆகி மேலே மெத்துமெத்தென்று வெந்தபின் இறக்கி தக்காளி கெச்சப்புடன் பரிமாறவும்.

குழந்தைகளுக்கு என்பதால் இதில் காய்கறிக் கலவையும் மசாலாவும் அளவாக சேர்க்கவும். சீஸும், வெண்ணெயும் கொஞ்சம் அதிகம் சேர்க்கலாம்.


6. மினி இட்லி மஞ்சூரியன்

தேவையானவை :-

இட்லி – 2 அல்லது மினி இட்லி – 25, குடைமிளகாய் – 1 பெரிய வெங்காயம் – 1. சோயா சாஸ் – 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் , உப்பு –அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை, மைதா – 1 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளோர் – 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன். எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-

இட்லிகளை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அல்லது மினி இட்லி என்றால் அவற்றை அப்படியே உபயோகிக்கலாம். மைதா, கார்ன்ஃப்ளோரை கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து மினி இட்லிகளை அதில் நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஆலிவ் ஆயிலை பானில் காயவைத்து சதுரமாக வெட்டிய குடைமிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து உப்பு சீனி அஜினோமோட்டோ போட்டு வதக்கவும். இதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடம் கொதித்ததும் , பொரித்த இட்லித் துண்டுகளைப் போட்டுக் கலக்கி இறக்கிப் பரிமாறவும்.


7.காலிஃப்ளவர் சாப்ஸ்:-

தேவையானவை :-
காலிஃப்ளவர் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன், மைதாமாவு , கடலை மாவு, சோளமாவு – தலா ஒரு டேபிள் ஸ்பூன்., உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

காலிஃப்ளவரைப் பூக்களாகப் பிரித்து உப்பு கலந்து வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு நன்கு பிசறி லேசாகத் தண்ணீர் தெளித்து ஒரு பானில் போட்டு மூடி வைத்து சிம்மில் 5 நிமிடம் வேகவிடவும். தண்டுப் பாகம் ஓரளவு வெந்திருந்தால் எடுத்துவிடலாம். இல்லாவிட்டால் இன்னும் சிறிது நீர் தெளித்து தண்டுப்பாகம் அடிப்பக்கம் இருக்குமாறு வேகவிடவும்.

மைதாமாவு, கடலை மாவு, சோளமாவை உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்துக் கரைத்து வைக்கவும். இதில் வேகவைத்த காலிஃப்ளவர் பூக்களை நனைத்தெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.


8. கசாட்டா ஐஸ்க்ரீம்:-

தேவையானவை :-

பால் – 1 லிட்டர்.கார்ன் ஃப்ளோர் – 2 டேபிள் ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப், லிக்விட் க்ளுக்கோஸ் –  2 டீஸ்பூன். சீனி – 2 டேபிள் ஸ்பூன். வனிலா எசன்ஸ் – சில துளி, பிஸ்தா பருப்பு – 8, க்ரீன் ஃபுட் கலர் – சிறிது, ரோஸ் எசன்ஸ் –சில துளி, ரோஸ் கலர் – சிறிது, ட்ரிங்கிங் சாக்லெட் – 2 டீஸ்பூன். பிஸ்தா, பாதாம் முந்திரி – மூன்றும் கலந்து வறுத்து சிறு துண்டுகளாக்கியது – 2 டேபிள் ஸ்பூன். ஸ்பாஞ்ச் கேக் – மெலிதாக வெட்டி வைக்கவும்.
செய்முறை :-

பாலைக் கரண்டி போட்டுக் காய்ச்சவும். கொஞ்சம் திக்காக வரும்போது சிறிது பாலில் கார்ன் ஃப்ளோரைக் கரைத்து ஊற்றி சீனி சேர்த்துக் காய்ச்சவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கரைந்தவுடன் இறக்கி ஆறவைத்து லிக்விட் குளுக்கோஸ் சேர்த்து மிக்ஸியில் ப்ளெண்டரில் போட்டு நன்கு அடிக்கவும்.

நான்கு பாகமாகப் பிரித்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும். ஐஸ்க்ரீம் ட்ரேயில் முதல் பாகத்தில் ட்ரிங்கிங் சாக்லேட் சேர்த்துக் கரையவைத்து ப்ளண்டரில் நன்கு ஃப்ளஃபியாக அடித்து ஊற்றவும். 6 மணி நேரம் உறைய விடவும். அடுத்த பாகத்தில் வெனிலா எசன்ஸ் கலந்து ப்ளெண்டரில் நன்கு அடித்து சாக்லெட் ஐஸ்க்ரீம் மேல் ஊற்றவும். ஆறுமணிநேரம் உறைந்தவுடன். பிஸ்தாவை ஊறவைத்து அரைத்து இன்னொரு பாகத்தில் சேர்த்து பச்சைக் கலர் போட்டு ப்ளெண்டரில் அடித்து மூன்றாம் லேயராக ஊற்றவும். இன்னும் ஆறுமணிநேரம் உறைந்ததும் மிச்சத்தில் ரோஸ் எசன்ஸும் ரோஸ் கலரும் போட்டு நன்கு ப்ளஃபியாக அடித்து ஊற்றவும்.

அதுவும் ஆறுமணிநேரம் உறைந்து செட்டானவுடன் எடுக்கவும். ஒரு ப்ளேட்டில் ஸ்பாஞ்ச் கேக்கை மெலிதாக வெட்டிப் பரப்பவும். ஐஸ்க்ரீம் ட்ரேயை வெளிப்புறமாக லேசாக தண்ணீரில் காண்பித்தால் ஐஸ்க்ரீம் ட்ரேயிலிருந்து எடுக்க வரும். ஒரு கத்தியால் டிடாச் செய்து ஸ்பாஞ்ச் கேக் மேல் கவிழ்க்கவும். பொடித் துண்டுகளாக்கிய நட்ஸ் தூவி கட் செய்து ஐஸ்க்ரீம் கப்புகளில் போட்டுக் கொடுக்கவும். 

டிஸ்கி :_- இந்த ரெசிப்பீஸ் மே 21, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...