சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு
சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

வெள்ளி, 2 டிசம்பர், 2016

கொண்டைக்கடலை சுண்டல். CHANA SABUT SUNDAL.

கொண்டைக்கடலை சுண்டல் :-


தேவையானவை:- வெள்ளைக் கொண்டைக்கடலை அல்லது கறுப்புக் கொண்டைக்கடலை – 1 கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – 1 டீஸ்பூன் துருவியது, வரமிளகாய் – 2 , கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், கடுகு உளுந்து எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- வெள்ளை அல்லது கறுப்புக் கொண்டைக்கடலையை முதல்நாளே ஊறப்போடவும். மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து நான்கு விசில் வேகவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், இஞ்சி தாளித்துக் கருவேப்பிலை போடவும். கொண்டைக்கடலையைப் போட்டுக் கிளறி தேங்காய்த்துருவலைத் தூவி இறக்கவும். 

தேங்காய் சாதம், COCONUT RICE.

தேங்காய் சாதம்:-


தேவையானவை:- பாசுமதி அரிசி அல்லது சீரகச் சம்பா அரிசி அல்லது பச்சரிசி – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 கப், முந்திரிப் பருப்பு – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய், கடுகு, உளுந்து தலா – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா மூன்று டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- அரிசியைக் களைந்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சிறிது நெய் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து உதிராக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளித்து கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் பச்சை மிளகாய் சேர்க்கவும். இதில் உப்பைச் சேர்த்து சாதத்தில் கொட்டவும். நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி அதில் தாளித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி நிவேதிக்கவும்.

வியாழன், 1 டிசம்பர், 2016

பிள்ளையார் முதல் அனுமன் வரை சிறப்பு பிரசாதங்கள். GANAPATHI - HANUMAN.

1.விநாயகர்

வரகரிசி வெல்லக் கொழுக்கட்டை

தேவையானவை:- வரகரிசி – 2 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை. உப்பு - 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- வரகரிசியையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்துக் களைந்து காயவைத்து கொழுக்கட்டை மாவு பதத்தில் பொடித்து வைக்கவும். வெல்லத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகுவைத்து வடிகட்டி மாவில் சேர்த்து தேங்காய்த்துருவல் போடவும். உப்பும், ஏலத்தூளும் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும். ஆறியதும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.

பச்சைப் பயறு அடை:-

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பாசிப்பயறு – 1 கப், பச்சை மிளகாய்- 2, இஞ்சி – 1 இன்ச் துண்டு, கொத்துமல்லி – 1 கைப்பிடி, தேங்காய்த் துருவல், காரட் துருவல் – தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு- அரை டீஸ்பூன், எண்ணெய்- 50 மில்லிகிராம்.

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பயறையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ( பாசிப்பயறை முளை கட்டியும் உபயோகிக்கலாம். ). பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, கொத்துமல்லித் தழை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதில் தேங்காய், காரட் துருவல் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தோசைக்கல்லில் அடையாகத் தட்டி எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பானதும் எடுத்து நிவேதிக்கவும்.

கடலைப்பருப்பு சுண்டல். CHANNA DHAL SUNDAL

கடலைப்பருப்பு சுண்டல்:-

தேவையானவை;- கடலைப்பருப்பு – 1 கப், தேங்காய்த்துருவல் -1 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- கடலைப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். கால் கப் நீரூற்றி குக்கரில் ஒரு விசில் வேகப்போடவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை பெருங்காயப்பொடி தாளித்து கடலைப்பருப்பைச் சேர்த்து உப்புப் போடவும். நன்கு கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

புதன், 30 நவம்பர், 2016

வெண்பொங்கல் VENPONGAL

வெண்பொங்கல்:-

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பாசிப்பருப்பு – முக்கால் கப், மிளகு, சீரகம் தலா – ஒரு டீஸ்பூன், நெய்- 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரி – 20, கருவேப்பிலை – 1 இணுக்கு, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 துண்டு. மிளகு சீரகத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் களைந்து மிளகு சீரகம், பொடியாக அரிந்த இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் போட்டு குக்கரில் ஆறு கப் தண்ணீர் விட்டு ஒரு விசில் வேகவைக்கவும். இறக்கி லேசாக மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் உளுந்தம்பருப்பு, மிளகு சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து கருவேப்பிலை போட்டுப் பொரிந்ததும் மிளகுசீரகத் தூள் போட்டு பொங்கலில் கொட்டிக் கிளறி மூடிவைத்து நிவேதிக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...