எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஜூன், 2016

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ். HEALTHY FOOD RECIPES.

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ் :-
1.சாமை தயிர்சாதம்
2.
வெந்தய வரதோசை.
3.
பிரண்டைத் துவையல்.
4.
கருவேப்பிலை சட்னி
5.
வாழைப்பூ துவரன்.
6.பாகற்காய் பக்கோடா

7.காரட், தக்காளி சூப்.
8.பொன்னாங்கண்ணிக் கீரை மண்டி.
9.நெல்லிக்காய் ஊறுகாய்.
10.கருப்பட்டிப் பாயாசம்.

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ் :-

1.சாமை தயிர்சாதம்:-
தேவையானவை :-சாமை 1 கப், பால்ஒரு கப், தயிர்அரை கப், கொத்துமல்லித்தழைசிறிது, மாதுளை முத்துக்கள்ஒரு கைப்பிடி, காரட் துருவியது – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சிஒரு இஞ்ச் துருவியது. பச்சைமிளகாய்பாதி பொடியாக அரிந்தது., கிஸ்மிஸ் – 20, உப்புகால் டீஸ்பூன்.  

செய்முறை :- சாமையைக் கழுவி மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் மூன்று விசில் வைத்து நன்கு வேகவிடவும். வெந்ததும் இறக்கி உப்பு சேர்த்து பாலை ஊற்றி நன்கு மசித்து ஆறவிடவும். ஆறியதும் மாதுளை முத்துக்கள், கொத்துமல்லித்தழை, காரட் , இஞ்சி, பச்சைமிளகாய், கிஸ்மிஸ் சேர்த்து தயிரையும் சேர்த்து நன்கு கலந்து நிவேதிக்கவும். இது உடல் குளிர்ச்சியை உண்டாக்கும்.

2.வெந்தய வரதோசை.

தேவையானவை :- இட்லிகார் அரிசி – 4 கப், வெந்தயம் – கால் கப்,உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:-
வெந்தயத்தையும், அரிசியையும் தனித்தனியாகக் கழுவி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து முதலில் வெந்தயத்தை நன்கு பொங்க அரைத்து அதன் பின் அரிசியைச் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். எட்டு மணி நேரம் புளித்ததும் தோசைக்கல்லில் ஒரு துணியில் எண்ணெய் தொட்டுத் தடவி தோசைகளாக வார்த்து மூடி போட்டு வேகவைத்து மடித்து எடுத்து நிவேதிக்கவும். இது மலச்சிக்கலை நீக்கி குளிர்ச்சியை அளிக்கும். டயபடீஸ் நோயாளிகளுக்கு ஏற்றது.


3.
பிரண்டைத் துவையல்.:-

தேவையானவை :- பிரண்டை – 10 இணுக்கு , பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 5, உப்பு – அரை டீஸ்பூன், புளி – 2 சுளை. பெருங்காயம் – சிறிது. கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பிரண்டையின் நரம்பை உரித்து தோல் சீவி துண்டுகளாக்கவும். ஒரு பக்கம் தோலுரித்தபடியே இன்னொரு பக்கம் நறுக்கலாம். வெங்காயம் தக்காளியைத் துண்டுகள் செய்யவும். எண்ணெயைக் காயவைத்து முதலில் பிரண்டையை நன்கு வதக்கவும். அதன் பின் சிறிது எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து தாளித்து வரமிளகாய், வெங்காயம் தக்காளியை வதக்கி பிரண்டையையும் போட்டு வதக்கி உப்பு புளி சேர்த்து இறக்கி ஆறவிடவும். கொரகொரப்பாக அரைத்து தயிர்சாதத்துடன் பரிமாறவும். இது பசியைத் தூண்டும்.

4.
கருவேப்பிலை சட்னி:-

தேவையானவை :- இளந்தளிர் கருவேப்பிலை – 1 கட்டு, சின்ன வெங்காயம் – 10, பூண்டுப் பல் – 1, வரமிளகாய் – 4, உப்பு – கால் டீஸ்பூன், புளி – 2 சுளை, பெருங்காயம் – 1 சிட்டிகை. எண்ணெய், கடுகு, உளுந்து தலா – அரை டீஸ்பூன்.

செய்முறை:- கருவேப்பிலையை ஆய்ந்து கழுவவும். சின்ன வெங்காயம் பூண்டை உரிக்கவும். வரமிளகாய் பெருங்காயம் உப்பு புளியுடன் மிக்ஸியில் நைசாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். இதில் கடுகு உளுந்தை எண்ணெயில் தாளித்துக் கொட்டி உபயோகிக்கவும். இது உடலுக்கு இரும்புச் சத்து அளிக்கும். இரத்த விருத்தி.

5.
வாழைப்பூ துவரன்.

தேவையானவை :-

வாழைப்பூ பாதி – உள் பிஞ்சு மடல்களில் உள்ள பூக்கள் , பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன் , வரமிளகாய் –1, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், மோர் – 1 கப், எண்ணெய் –  1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன்.

செய்முறை:-

பிஞ்சு வாழைப்பூவை பொடியாக நறுக்கி மோரில் போடவும். லேசாகப் பிழிந்து எடுத்து பாசிப்பருப்பு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து அரைமணி நேரம் வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயைக் கிள்ளிப் போடவும். இதில் ஊறவைத்த வாழைப்பூ பருப்புக் கலவையைப் போட்டு சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும். இது இரத்த சோகையைப் போக்கும்.

6.பாகற்காய் பக்கோடா :-

தேவையானவை :- நீளப் பாகற்காய் – கால் கிலோ, கடலை மாவு – அரை கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் , சோம்புத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- பாகற்காய்களை விதை நீக்கி வட்டமாகவோ செவ்வகத் துண்டுகளாகவோ வெட்டி உப்புத் தண்ணீரில் போட்டுப்பிழிந்து வைக்கவும். கடலை மாவில் மிளகாய்த்தூள் உப்பு சோம்புத்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பாகற்காய்த் துண்டுகளைத் தோய்த்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இது குடற்புழுக்களை அழிக்கும்.

7.காரட், தக்காளி சூப்.

தேவையானவை:- காரட் – 1 பெரிது, தக்காளி – 1 பெரிது, பெரிய வெங்காயம் – 1, வெள்ளை சாஸ் செய்ய :- வெண்ணெய் – 2 டீஸ்பூன், மைதா – 2 டீஸ்பூன், பால் – ½ கப், பட்டை இலை பூ ஏலக்காய்எல்லாம் தலா ஒன்று., மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன்., க்ரீம் –  2 டீஸ்பூன் ( ஆப்ஷனல் )

செய்முறை:-

காரட் பெரிய வெங்காயம் தக்காளியைத் துண்டுகளாக்கி குக்கரில் போடவும். அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பட்டை இலை பூ ஏலக்காயை ஒரு வெள்ளைத் துணியில் முடிச்சாகக் கட்டிப் போடவும். ஒரு விசில் வரும்வரை வேகவைத்து ஆறவைக்கவும்பட்டை இலை மூடிச்சை எடுத்துப் போட்டு விட்டு அரைத்து வடிகட்டவும். கடாயை சூடாக்கி அதில் வெண்ணெய் போடவும் வெண்ணெய் உருகும்போது மைதா சேர்த்துப் புரட்டவும். ஒரு நிமிடம் புரட்டியபின் பால் ஊற்றிக் கட்டிகள் இல்லாமல் கலந்து வேகவிடவும். கண்ணாடிபோல் வந்ததும் இறக்கி ஆறவிடவும். பரிமாறும்போது இரண்டு சாஸ்களையும் சூடாக்கி கப்பில் ஊற்றி அதில் உப்பு மிளகுத்தூள் தூவி அரை ஸ்பூன் க்ரீம் ஊற்றி சூப்ஸ்டிக்குடன் பரிமாறவும்இது எனர்ஜி கொடுக்கும்.

8.பொன்னாங்கண்ணிக் கீரை மண்டி. :-

தேவையானவை :- பொன்னாங்கண்ணிக் கீரை – 1 கட்டு, அரிசி களைந்த கெட்டித் தண்ணீர் – 2 கப், கெட்டி தேங்காய்ப் பால் – அரை கப், சின்ன வெங்காயம் – 10, வரமிளகாய் – 1, எண்ணெய் கடுகு உளுந்து சீரகம் – தலா ஒரு டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-

பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை இரண்டாக வெட்டவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சீரகம் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், சின்ன வெங்காயம் தாளித்து அதில் கீரையைப் போட்டு வதக்கவும். லேசாக வதங்கியதும் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துச் சுண்டியதும் உப்பு சேர்த்துத் தேங்காய்ப் பாலை ஊற்றி இறக்கி வைத்துக் குடிக்கக் கொடுக்கவும். இது வயிற்றுப்புண் வாய்ப்புண் போக்கும். கண் பார்வையைக் கூர்மையாக்கும்.

9.நெல்லிக்காய் ஊறுகாய்.:-

தேவையானவை :- முழு நெல்லிக்காய் – 20, மிளகாய்த்தூள் – கால் கப், நல்லெண்ணெய் – கால் கப், கடுகு வெந்தயம்  வறுத்துப் பொடித்தது – தலா அரை டீஸ்பூன், உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயப் பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்துக் கொட்டை நீக்கித் துண்டுகள் செய்யவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு பெருங்காயப் பொடி தாளித்து நெல்லிக்காயைப் போட்டு சிறிது புரட்டவும். இதில் மிளகாய்த்தூள் கடுகு வெந்தயப் பொடியைப் போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறி உடன் இறக்கி விடவும். இது நீண்ட ஆயுள் கொடுக்கும்.

10.கருப்பட்டிப் பாயாசம்.:-

தேவையானவை :- பச்சரிசி – ஒரு கைப்பிடி, தேங்காய்த்துருவல் – ஒரு கைப்பிடி கருப்பட்டி – ஒரு கட்டி, நெய் – அரை டீஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10

செய்முறை:- பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தேங்காய்த்துருவலோடு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பானில் ஊற்றிக் காய்ச்சவும். வெந்து கண்ணாடி போல் ஒட்டாத பதம் வந்ததும் கருப்பட்டியை நைத்து சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி இதில் ஊற்றவும். கொதி வந்ததும் இறக்கி வைத்து நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போட்டு ஏலப்பொடி தூவவும். நிவேதிக்கவும். இது இரத்தத்தைப் பெருக்கும். சத்து கொடுக்கும். 

டிஸ்கி :- இந்த உணவுக் குறிப்புகள் ஜூன் 3, 2016 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...